ஸ்கந்த சஸ்டி கவசம் மெட்டில் பாடுங்கள் : |
காப்பு |
அழைப்போர்க்கு அல்லல் போம்; துயரம் போம்; மனதில் |
வைப்போர்க்கு வாழ்க்கை பெருகி வளம் ஓங்கும் |
சித்தியும் சித்திக்கும் , அசோகர் அருள் |
ஆனந்த சக்திக் கவசம் இதனை. |
நல்லோர் துயர் தீர அசுரர் அழித்த |
சக்தி அருள் நெஞ்சே குறி. |
நூல் |
நிலை மண்டில ஆசிரியப்பா |
சக்தியை அழைக்க சடுதியில் வருவாள் |
பக்தர்க்கு அருளும் பரமன் மனையாள் |
பாதம் இரண்டில் கொலுசுகள் ஒலிக்க |
கீதம் பாடும் கிண்கிணி சலங்கை …..004 |
பைய நடனம் செய்யும் பைந்தமிழ் எழிலாள் |
கையில் சூலத்தோடு காக்க இங்கு வந்து |
வருக வருக மலையாள் வருக |
வருக வருக மாண்புடன் வருக …..008 |
எண்திசை வாழும் எண்மர் போற்ற |
மண்தனை வளர்க்க சூலம் வருக |
வளைக்கரம் வாழ்த்த வருக வருக |
இன்பச் சிவனின் நினைவோள் வருக …..012 |
ஆறுமுகனின் அம்மா வருக |
குங்குமம் அணிந்து கூடவே வருக |
சிறந்த மகளே சீக்கிரம் வருக |
சக்தியின் உருவே சடுதியில் வருக ….016 |
உமையவள் நீயே கிலி கிலி கிலி கிலி |
அமைப்பவள் நீயே வழி வழி வழி வழி |
வினைகள் அறுக்க வீரீ நமோ நம |
கருணை வடிவே சரணம் சரணம் …..020 |
தசரதன் மகளே வருக வருக |
அசுரரை அழித்த அம்மா வருக |
எந்தனை ஆளும் எளிழோள் கையில் |
பதினேட்டாயுதம் பாசாங்குசமும் ….024 |
கருணை விழிகள் கனிவுடன் திகழ |
விரைந்தெனைக் காக்க விழியோள் வருக |
ஐயும் கிளியும் அடைவுடன் சவ்வும் |
உய்யொளி சவ்வும் உயிர் ஐயும் கிளியும் …..028 |
கிளியும் சவ்வும் கிலரொளி ஐயும் |
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் |
சக்தி நீயும் தனியொளி யவ்வும் |
குண்டலி ஏறி குலமகள் வருக ……032 |
அன்னை முகமும் அருள் கூறும் அழகும் |
செவ்வொளி நெற்றியும் நெடிய புருவமும் |
பதினெட்டுக் கையும் பவளச் செவ்வாயும் |
நன்னெறி நெற்றியில் நவரத்ன சுட்டியும் …..036 |
எழில் சேர் செவியில் இலங்கும் குண்டலமும் |
அன்பும் கருணையும் அருளும் நெஞ்சில் |
பல்வகை மணியும் பதக்கமும் தரித்து |
நல்வகை சேர்ந்த நவரத்ன மாலையும் ……040 |
உன்புகழ் பாடும் முத்தணி மார்பும் |
செப்பழகுடைய திருவயிருந்தியும் |
முருகனின் மடியில் சுடரொளிப் பட்டும் |
நவரத்தினம் பதித்த நற்சீறாவும் ……044 |
என் குகன் அமர்ந்த எழில் சேர் கால்களும் |
சிறந்த கால்களில் கொலுசொலி இசைக்க |
செககண செககண செககண செகண |
மொகமொக மொகமொக மொகமொக மொகன …..048 |
நகநக நகநக நகநக நகன |
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண |
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் |
ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ……052 |
க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம் |
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு |
உயிர்ச் சக்தி அவளே உள்ளே இருப்பாள் |
முந்து முந்து முன்னாள் முந்து …..056 |
எந்தனை ஆளும் என்னுயிர் அம்மா |
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவு |
லாலா லாலா லாலா வேசமும் |
லீலா லீலா லீலா வினோதம் என்று …..060 |
உன் திருவடியை உறுதியாய் பற்றி |
என்தலை வைத்தேன் இணையடி காக்க |
என்னுயிர்க்கு உயிரே என் அம்மா காக்க |
பண்புடை விழியால் என்னைக் காக்க ……064 |
அடியவன் வதனம் எழில் சூல் காக்க |
சிகப்பு சேர் நெற்றியை சீர் சூல் காக்க |
கலங்கும் கண்களை கருஞ் சூல் காக்க |
செவிகள் இரண்டும் செஞ் சூல் காக்க …..068 |
நாசிகள் இரண்டும் நல் சூல் காக்க |
பேசும் வாய்தனை பெருஞ் சூல் காக்க |
முப்பத்திருபல் முனி சூல் காக்க |
செந்தமிழ் நாவை செஞ் சூல் காக்க …..072 |
கன்னம் இரண்டை கதிர்சூல் காக்க |
என்னிளம் கழுத்தை இனி சூல் காக்க |
மார்பை ரத்ன வடி சூல் காக்க |
சேர்ந்த நெஞ்சினை நேர் சூல் காக்க ……076 |
வடிசூல் இருதோள் வனப்புடன் காக்க |
பிடரிகள் இரண்டும் பெரும் சூல் காக்க |
அழகிய முதுகை அருள் சூல் காக்க |
பளு பதினாறும் பரு சூல் காக்க …..080 |
வெற்றி சூல் வயிற்றை விளங்கவே காக்க |
சிற்றிடை அழகுற செஞ் சூல் காக்க |
அரை ஞான் கயிற்றை அருள் சூல் காக்க |
ஆண் பெண் குறிகளை அழகு சூல் காக்க ……084 |
பிட்டம் இரண்டும் பெரும் சூல் காக்க |
வட்டக் குதத்தை வல் சூல் காக்க |
பனைத் தொடை இரண்டும் பரு சூல் காக்க |
கணைக்கால் முழங்கால் கதிர் சூல் காக்க ……088 |
ஐவிரல் அடியினை அருள் சூல் காக்க |
கைகால் இரண்டும் கருணை சூல் காக்க |
முன்கை இரண்டும் முரண் சூல் காக்க |
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க ……092 |
நாவில் சரஸ்வதி நற்துனை ஆக |
நாபிக் கமலம் நல்சூல் காக்க |
முப்பால் நாடியை முனை சூல் காக்க |
எப்பொழுதும் என்னை எதிர் சூல் காக்க …..096 |
அடியேன் வசனம் அசைவுள நேரம் |
கடுகவே வந்து கனக சூல் காக்க |
வரும் பகல் தன்னில் வச்ர சூல் காக்க |
அரை இருள் தன்னில் அரும் சூல் காக்க ……100 |
ஏமத்தில் சாமத்தில் எதிர் சூல் காக்க |
தாமதம் நீக்கி சதுர் சூல் காக்க |
காக்க காக்க கனக சூல் காக்க |
நோக்கும் போதே நோய்கள் நீங்கும் …..104 |
தாக்கும் போதே தடைகள் தகரும் |
பார்க்கும் போதே பாவம் அழியும் |
பில்லி சூன்யம் பெரும்பகை அகலும் |
வலிய பூதம் வாலாட்டும் பேய்கள் ……108 |
அல்லல் தருகின்ற அடங்கா முனிகள் |
பிள்ளைகள் கொல்லும் பின்வீட்டு பேயும் |
கொள்ளிக்கண் பேய்களும் குணங்கெட்ட பேய்களும் |
பெண்களைத் தொடரும் பேதைப் பேய்களும் ……112 |
அடியனைக் கண்டால் அங்கேயே அழிந்திட |
இரத்தக் காட்டேரி இறுமாப்பு படைகள் |
இரவிலும் பகலிலும் எதிர் வரும் தீயரும் |
கண்டதும் உண்ணும் காளியோடு அனைத்தும் …..116 |
விடாது தொடரும் வினை மிகு பேய்களும் |
தண்டியம் செய்யும் சண்டாளர்களும் |
என் பெயர் கேட்டதும் இடி விழுந்து நடுங்கிட |
அறியாது வைக்கும் அற்பப் பொம்மைகள் …..120 |
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் |
கைகால் நகங்களும் மண்டை ஓடும் |
பொம்மைகள் உடனே பானையில் வைத்த |
வீட்டினில் வைக்கும் வினை பிடித்தோர்கள் …..124 |
பொம்மையில் ஆணியை அடித்தே வைத்து |
காசு பணத்துடன் சோற்றையும் வைத்து |
குங்குமம் ஜபித்து கூடவே வைத்தோர் |
அடியேனைக் கண்டால் அலறி அழிந்திட ……128 |
பகையும் தீயோரும் வந்து வணங்கிட |
எமனின் ஆட்கள் எழுந்து ஓடிட |
பயந்து அழுது பாய்ந்து ஓடிட |
மனமும் கலங்கி மறைந்து ஓடிட …..132 |
கற்களில் முட்டி கயற்றால் கட்டி |
உடம்பெல்லாம் நோக உடனே கட்டு |
எலும்புகள் உடைய எட்டி உதைத்து |
கட்டும் கட்டில் கைகால் நொறுங்க …..136 |
அடிக்கும் அடியில் கண்கள் வெளிவர |
சிறு சிறு துண்டாய் சீவிப் போடு |
அரு அரு என்றே பகையை அறுத்திடு |
சொருகு சொருகு சூலம் சொருகு …..140 |
நெருப்பு அவர்கள் நெஞ்சில் பற்றிட |
எரியட்டும் நெருப்பு என்றென்றும் அங்கே |
சூலத்தை எறிவாய் சூழ்ந்தது ஓட |
புலிகள் நரிகள் பொல்லாத நாய்கள் …..144 |
எலிகள் கரடிகள் எல்லாம் ஓட |
தேள்கள் பாம்புகள் சீயான் பூரான்கள் |
பாழ் பட்டுப் போன பூச்சிகள் கடித்து |
ஏறிய விஷமும் உடனே இறங்க ……148 |
காயங்கள் சுளுக்குகள் கதறும் தலைவலி |
வாதம் காய்ச்சல் வலிப்பு நோய்கள் |
சூலை சயம் குன்மம் சொரியும் சிரங்கும் |
வலிகள் புண்கள் வயற்று நோய்கள் …..150 |
ராஜ பிளவைகள் ராத்திரி நோய்கள் |
பூனை நாய் சிலந்திக் கடிகள் |
பல்வலி அரணை ஆப்புக் கட்டிகள் |
எல்லா நோய்களும் என்னைக் கண்டதும் ……154 |
கதறி ஓட கருணை புரிவாய் |
அனைத்து உலகமும் அன்புடன் உறவாட |
ஆண் பெண் அனைவரும் நட்பாக |
நாட்டை ஆள்வோரும் நட்புடன் உதவ …..160 |
உன்னை நம்பி உன் பெயர் சொல்ல |
சக்தியும் நீயே சகலமும் நீயே |
திரிபுர சுந்தரி தினமும் நீயே |
சப்தமும் நீயே சலனமும் நீயே …..164 |
விஷ்ணுவின் தங்கை வேந்தனின் மங்கை |
தேவரைக் காக்க திரிசூல் எடுத்தாய் |
மாந்தரைக் காக்கும் மகிமை அவளே |
காலனை அழித்து ககனம் காப்பாய் …..168 |
எல்லோரையும் காக்க இப்போதே வருவாய் |
தணிகையை ஆளும் சங்கரன் மனையாள் |
காஞ்சி நகர் அமர் காமாக்ஷி தாயே |
மதுரை அரசாலும் மாபெரும் அரசி …..172 |
கருக்காவூர் காத்த கருணைத் தெய்வம் |
மாங்காடு அமர்ந்த மங்கையர்க்கரசி |
காசியில் சிரிக்கும் விசாலாக்ஷி தாயே |
கலைகளின் அரசி கலைமகள் என்றும் ….176 |
என்னிடம் இருக்க நான் தினம் பாட |
என்னுள் இருக்கும் எந்தன் தாயை |
பாடுவேன் தினமும் பைந்தமிழ் மொழியால் |
ஆடினேன் பாடினேன் ஆனந்தத்தாலே ……180 |
கொஞ்சும் அழகுடன் குங்குமம் அணிய |
பாழும் வினைகளும் பாவமும் நீங்கி |
உன் அடி சேர உன் அருளாலே |
அன்புடன் தருவாய் கல்வியும் செல்வமும் …..184 |
நல்ல வாழ்வும் நலமும் பிறவும் |
சீரும் சிறப்பும் சித்திகள் பெருக |
வாழ்க வாழ்க வளைக்கரம் வாழ்க |
வாழ்க வாழ்க திரிசூல் வாழ்க ……188 |
வாழ்க வாழ்க மதுரைக்கு அரசி |
வாழ்க வாழ்க வாழ்த்தும் சிவனுடன் |
வாழ்க வாழ்க சிம்மம் ஏறினாள் |
வாழ்க வாழ்க என் துயரங்கள் நீங்க …..192 |
ஏதேனும் பிழைகள் ஏதேனும் தவறுகள் |
ஏதேனும் குறைகள் செய்திருந்தாலும் |
பெற்றவள் நீதான் பொருப்பவள் நீதான் |
தந்தை சிவன்தான் தாயும் நீதான் ….196 |
உன் பிள்ளை என்மேல் அன்பாய் இருந்து |
உன் மகன் என்மேல் உயிராய் இருந்து |
உன்னிடம் வந்தோர் உயர்ந்திட வழி செய் |
ஆனந்த சக்தி கவசம் விரும்பிய ….200 |
அசோக ஆனந்த சித்தன் பகர்ந்ததை |
காலையில் மாலையில் கவனமாய் தினமும் |
நன்றாய் குளித்து நல் துணி அணிந்து |
நினைவு தடுமாறாது நிற்கும் நிலையில் …..204 |
ஆனந்த சக்திக் கவசம் இதனை |
சிந்தை ஒன்றாகி தியானிப்பவர்கள் |
ஒரு நாள் முப்பத்தாறுருக்கொண்டு |
ஓதியே ஜபித்து சிகப்பும் அணிய …..208 |
எட்டுத் திக்குள்ள எண்மரும் அடங்குவர் |
செயல்களில் எல்லாம் வெற்றியை தருவர் |
எதிரிகள் எல்லாம் எப்போதும் வணங்குவர் |
சூரியன் முதலோர் சூழ்ந்து உதவுவர் ……212 |
எப்போதும் என்றும் இளமையாய் வாழ்வர் |
என்றும் பதினாறாய் எப்போதும் இருப்பர் |
அன்னையின் கையிலுள்ள அருள் சூலத்தை |
பாதையாய் வைத்து பயணம் செய்க …..216 |
கண்ணால் காண கடும் பேய் ஓடும் |
தீயோரெல்லாம் தீய்ந்து கருகுவர் |
நல்லவர் நெஞ்சில் நாளும் நிற்கும் |
அல்லவர் தீயோர் அழிக்கும் சூலை …..220 |
எந்தன் உள்ளம் எந்நாளும் அறிந்து |
வீரலக்ஷிமை விரும்பிடும் தினமே |
சூரனை அழித்து துன்பம் நீக்கி |
தேவர்களுக்கு தேனின்பம் தந்து …..224 |
காஞ்சிபுரத்தில் கடும் தவம் செய்த |
செல்லக் கால்களில் சேர்வோம் இன்றே |
என்னை ஆட்கொண்டு எந்தன் நெஞ்சில் |
எப்போதும் இருக்கும் அம்மா போற்றி …..228 |
தேவர்கள் நெஞ்சில் வாழ்வாய் போற்றி |
பரமனின் நெஞ்சின் மகிழ்வே போற்றி |
அருள் மிகு அழகு அம்மா போற்றி |
அரக்கரை அழித்த அன்பே போற்றி …..232 |
காமாக்ஷி போற்றி கருணை போற்றி |
வெற்றி பெறுகின்ற சூலே போற்றி |
திரிபுரசுந்தரி புவனத்தரசி |
ஸிம்ஹவாஹிநி சீரடி சரணம் …..236 |
சரணம் சரணம் அம்மா சரணம் |
சரணம் சரணம் சக்தியே சரணம் |
Saturday, December 3, 2011
anantha sakthi kavasam lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment